×

காவேரிப்பாக்கம் பொதுப்பணித்துறையின் கீழ் 24 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் 24 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரியை, அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ஏரியாகவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரமாண்ட  ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரியாகும். ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. மொத்த கொள்ளவு 41.601 மி.கன அடி. ஏரி நிரம்பி வழியும் காலங்களில் விவசாயிகள்  மூன்று போகம் அறுவடை செய்யலாம். இந்த ஏரி நிரம்பிய காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக, கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 6278 ஏக்கர் பாசனம் நடைபெறும். கடந்த ஆண்டு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காவேரிப்பாக்கம் ஏரியில் 28 அடி நிரம்பின. இந்நிலையில் கடந்த ஆண்டு போன்று இந்த வருடமும் ஏரியில் செப்டம்பர் மாதத்தில் 28 அடி வரை தண்ணீர் நிரம்பி இருந்தது. இதன் காரணமாக கடந்த 19-ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடைவாசல் பகுதியில் உள்ள 30 மதகுகள் வாயிலாக தண்ணீர் திறந்து விட்டனர். இதேபோல் பொன்னப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ஒன்பது மதகுகள் வாயிலாகவும், மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள பாகவெளி, கடப்பேரி, சுமைதாங்கி, மங்கேந்திரவாடி, கீழ்வீராணம், மங்களம் பெரிய ஏரி, மங்களம் சித்தேரி, காட்டுப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், நரிந்தாங்கல், அரசங்குப்பம், புதூர்,பன்னியூர், கங்காதரநல்லூர், உள்ளிட்ட 24 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதேபோல் எஞ்சியுள்ள ஏரிகளும் நிரம்பும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பாலாற்றில் இருந்து ஏரிக்கு வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டு இருக்கின்றன. அதனால், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 15 கன அடி தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகின்றன. பருவ மழை தொடங்கும் முன்பே ஏரிகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post காவேரிப்பாக்கம் பொதுப்பணித்துறையின் கீழ் 24 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Cauveripakam Public Department ,Sembarambakkam ,Tamil Nadu ,Coverage Public Department ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...